ஜென்னல் (JENNAL)
சத்குருவின் பார்வையில் ஜென் கதைகள்
எழுத்தாக்கம்: சுபா
‘த்யான்’ என்னும் வார்த்தை சீனாவில் ‘ச்சான்’ என்று ஆகி பிறகு அது ஜப்பானுக்கு சென்றபோது, ‘ஜென்’ என்று ஆகிவிட்டது. எனவே ஜென் என்பது அடிப்படையில் தியானம் என்ற சொல்லையே குறிக்கிறது. ஜென் பாதை என்பது தியானப் பாதைதான். நமது கலாச்சாரத்தில், தியானத்தில் ஈடுபடுவதற்கு நாம் எவ்வாறு பலவிதமான பயிற்சி முறைகளை உருவாக்கி வைத்திருக்கிறோமோ, அதே போல் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் அங்குள்ள மக்கள் பல பயிற்சி முறைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
ஜென் கதைகள் மூலம் அந்த பயிற்சி முறைகளை நாம் ஓரளவிற்கு புரிந்து கொள்ள முடியும். ஜென் கதைகள் மிகவும் நுட்பமான அர்த்தங்களை உள்ளடக்கியவை. ஆனால் அந்த கதைகள் எப்போதும் மிகவும் சுருக்கமாகவே சொல்லப்படுகின்றன. எனவே தியானப்பாதையில் முழுமையாக இல்லாதோர் அந்த கதைகளை படிக்கும்போது, பல நேரங்களில், தவறாகப் புரிந்து கொள்வதற்கே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
எனவே நுட்பமான அர்த்தங்கள் பொதிந்திருக்கக்கூடிய இந்த ஜென் கதைகள் சரியான விளக்கங்களுடன் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக எழுத்தாளர் சுபா அவர்கள் சத்குரு அவர்களுடன் நேரில் உட்கார்ந்து விளக்கங்கள் கேட்டு அதை எழுத்தாக்கம் ஆக்கி ஆனந்தவிகடன் வார இதழில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அனைவரின் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்ற அந்த ஜென் விளக்கங்கள் இப்போது புத்தகமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு கதையும், ஜென்னுக்கே உரிய படங்களுடன் அழகாக விளக்கப்பட்டிருக்கின்றன. எப்போதும் ஜென் ஓவியங்கள் கதைகளை விடவும் சுவையாக இருக்கும், நுட்பமாக இருக்கும். இந்த நூலிலும் அப்படித்தான், ஓவியங்கள் மிகவும் அழகாக கையாளப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கதைக்குமே சத்குருவின் தெளிவான விளக்கங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஜென் பற்றிய குழப்பங்கள் உங்களுக்கு இதுவரை ஏதும் இருக்குமானால், அந்தக் குழப்பங்கள் தீர்வதற்கு, இந்த நூலை நீங்கள் நம்பிக்கையுடன் படிக்கலாம்.